தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது [14]. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000-ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500-ஆம்ஆண்டைச் சேர்ந்தவையாகும் [15]. இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக