சிலம்பம்
"சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது."சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.
எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.