செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

சீனிவாச இராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 221887 - ஏப்ரல் 261920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")

சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

1907-11 இல் படைப்பு வெள்ளம்

மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம்(Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள்(Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம்,சென்னைப்பல்கலைக் கழகம்ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக