கம்பர்
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின்சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.
கம்பரின் சிறப்பு
"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று. கம்பர் "கவிச்சக்கரவத்தி" என்றும் புகழப்படுகிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.
கம்பனின் காலம்
கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பதுமூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.
இராமாயணம் தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.
இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. எனவே அவை கம்பனின் படைப்பு அல்ல என்ற கருத்தும் உள்ளது.